சனி, 12 டிசம்பர், 2009

கவிதா ஒரு தனி மரம்

google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);
மடியிலே குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. கவிதாவுக்கு தூக்கம் வரவில்லை. அவள் தூங்கி பல மாதங்களாகி விட்டது. எங்கேயோ சர்ச் வாசலில் எழுதியிருந்த வாசகம் நினைவுக்கு வந்தது."மனிதன் உலகையே தனதாக்கிக் கொண்டாலும், அவன் ஆன்மாவை இழப்பதால் கிடைக்கும் பயன் என்ன?'வாசகத்துடன் கடந்து வந்த வாழ்க்கையும் நினைவில் சுழன்றது.
கவிதாவின் அம்மா, அப்பா ரெண்டு பேருமே கூலி வேலைக்குப் போனால்தான் வீட்டிலே அடுப்பு எரியும். அது வறுமை சுழற்றி அடித்த காலம். கவிதாவுக்கு தெளிவாய்ப் புரிந்தது, படிப்பை விட்டால் நமக்கு வேறு கதி இல்லை என்று.வெறியோடு படித்தாள்; வெற்றியும் பெற்றாள். அரசுத் தேர்வு எழுதிய கவிதாவுக்கு அரசுத்துறையில் இளநிலை உதவியாளர் வேலை கிடைத்தது. உழைப்பு, பணியில் காட்டிய நேர்மை என அவளுக்கு சீக்கிரமே துறையில் நல்ல பெயரும், பதவி உயர்வும் கிடைத்தது.
அதே அலுவலகத்தில்தான் வேலை பார்த்தான் முருகன். அவளது திறமையை அருகிலிருந்தே ரசித்த அவன், அவளது முயற்சிகளுக்கும் உதவிகள் செய்தான். பொது மக்களுக்கு நேரடி சேவை செய்ய வேண்டிய அலுவலகம் என்பதால், அங்கே வேலைக்கும், டென்ஷனுக்கும் குறைவே இருக்காது.ஆனால், முருகனும், கவிதாவும் இருந்தால் வேலை சுலபமாய் முடியும். மக்கள் சந்தோஷமாய்த் திரும்புவார்கள். ஒரே மனநிலையில், ஒரே இடத்தில் வேலை பார்த்த இருவருக்கும் இடையே காதல் உருவாக, அதிக நாட்கள் தேவைப்படவில்லை; இரு வீட்டிலும் எதிர்ப்பும் இல்லை.திருமணம் முடிந்தது; சந்தோஷமாய்ப் போனது வாழ்க்கை. அடுத்த ஆண்டிலேயே ஆண் குழந்தையும் பிறக்க, கவிதா மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். அலுவலகப் பணியில் உயர அடுத்தடுத்து நிறைய தேர்வுகளை எழுதினாள்.
அவளைப் படிக்கச் சொல்லி விட்டு, வீட்டு வேலையையும், ஆபீஸ் வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தான் முருகன். நினைத்தது போலவே ஜெயித்தாள் கவிதா. அவள் எழுதிய தேர்வில், வேறு ஒரு துறையில் அதிகாரமுள்ள பதவி கிடைத்தது. எக்கச்சக்க சம்பளம், ஏகப்பட்ட அதிகாரம். தனி வாகனம், தனி பங்களா என வாழ்க்கை முறையே மாறியது. எல்லாம் வந்தபோது, கூடவே ஆணவமும் வந்து சேர்ந்தது. முருகனை எடுத்தெறிந்து பேச ஆரம்பித்தாள். வீட்டு வேலை எதையும் செய்வதில்லை என்பதில் திட்டவட்டமாய் இருந்தாள்.
காபி போட்டுக் கொடுப்பதிலிருந்து சமையல் வரை முருகனின் தலையில் போட்டு விட்டு, தினமும் "லேட்டாக' வர ஆரம்பித்தாள். முடிந்தவரை சமைத்து, இல்லாவிட்டால் ஓட்டலில் சாப்பாடு வாங்கிக்கொடுத்து, குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பி...முழு நேர வேலைக்காரன் ஆனான் முருகன்.இத்தனை செய்தபின்னும், துளியும் மரியாதை இல்லாமல் அவள் பேசியதில் துடித்துப் போனான். குழந்தைக்காக எல்லாம் பொறுத்துப் போனான். அடிக்கடி வெளியூர் சென்று நாள் கணக்கில் கவிதா தங்க ஆரம்பித்ததும், ஊரே ஒரு மாதிரியாகப் பேச ஆரம்பித்தது.
கவிதாவின் அலுவலகத்தில் விசாரித்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவளுக்கும், காண்டிராக்டர் ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு என்று. அடிக்கடி "கேம்ப்' என்ற பெயரில் ஊட்டி, கொடைக்கானல் சென்று அவனுடன் அவள் தங்குவதும் தெரிந்தது.இதைப் பற்றிக் கேட்ட முருகனை, இஷ்டத்துக்கு திட்டித் தீர்த்தாள் கவிதா. பொறுமையிழந்த முருகன், கவிதாவின் உயரதிகாரியிடம் புகார் செய்தான். அதிகாரியின் முன்னிலையில் விசாரணை நடந்தது. இனிமேல் கணவனுடன் இணக்கமாக வாழ்வதாக கூறிச்சென்றவள், மீண்டும் சண்டை போட்டாள்.
ஒரு நாள் தகராறு முற்றி, குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியே சென்றவள், அடுத்த நாளே தனி வீட்டில் குடியேறினாள். விவாகரத்து கேட்டு, வழக்கும் தொடுத்தாள். குழந்தைக்காக விவாகரத்து தர மறுத்தான் முருகன்.வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக போலீசில் பொய்ப்புகார் கொடுத்தாள். அவளுடைய அதிகாரம் அங்கே வேலையைக் காட்டியது. போலீசார் தினமும் முருகனை ஸ்டேஷனுக்கு அழைத்து, "ஒழுங்கா விவாகரத்து கொடுத்துட்டு போ' என்று மிரட்டினர்.முருகன் மறுத்து வந்தான். அடுத்த முயற்சியாக, தனது செல்வாக்கைப் பயன் படுத்தி முருகனை வெகு தூரத்தக்கு மாற்றல் செய்தாள். குழந்தைக்காக எல்லாவற்றையும் பொறுத்த முருகன், கடைசியில் வெறுத்துப் போய் விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்தான்.
குழந்தையோடு தனியாக வீட்டில் வசித்த கவிதா, அந்த காண்டிராக்டருக்கு "சின்ன வீடு' போலவே மாறிப்போனாள். வாரத்தில் 5 நாட்கள் கவிதாவோடு இருப்பது அந்த காண்டிராக்டரின் மனைவிக்கு தெரிந்தது. காண்டிராக்டரின் மாமனார், அரசியல் செல்வாக்குள்ள பெரிய மனிதர்.அவரின் காதுக்கு விஷயம் எட்டியவுடன், ஆயிரம் "வோல்டேஜ் கரண்ட்' அப்படியே கவிதா மீது பாய்ந்தது. அடுத்த சில மணி நேரத்தில் தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டத்தில் அதிகாரம் இல்லாத "டம்மி போஸ்டிங்' க்கு தூக்கி அடிக்கப்பட்டாள் கவிதா.
யார் யாரையோ பிடித்தும் காரியம் கைகூடவில்லை. வேறு வழியே இல்லாமல் மாற்றல் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்றாள் கவிதா. மாமனார் மிரட்டிய மிரட்டலில் நடுநடுங்கிப் போன காண்டிராக்டர், இப்போதெல்லாம் கவிதா போன் செய்தாலும் எடுப்பதில்லை. நேரடியாகப் பார்க்கப்போன போதும், அவளைப் பார்க்கவே இல்லை. ஒட்டு மொத்தமாய் உடைந்து போனாள் கவிதா. அப்போதுதான் முருகனின் காதல் மனது, அவளுக்குப் புரிய ஆரம்பித்தது. தனக்காக இல்லாவிட்டாலும், தனது குழந்தைக்காக தன்னை ஏற்றுக் கொள்வான் என்று அவனைத் தேடிப் போனாள்.
கஷ்டப்பட்டு, அவனது விலாசத்தைத் தேடி வீட்டுக்குப் போன போது, அங்கே முருகனுடன் இன்னொரு பெண்ணும் இருந்தாள். கஷ்டப்படும் ஏழைப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு, புது வாழ்க்கையை ஆரம்பித்திருந்தான் முருகன். இப்போது கவிதா ஒரு தனி மரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக