சுய கட்டுப்பாடு இருப்பின் நீரிழிவு நோயைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை
=================================================
இன்று உலகம் முழுவதும் பேசப்படும் நோய்களில் ஒன்றாகவே நீரிழிவு நோய் காணப்படுகின்றது. காரணம் இந்நோய் பரவலாக அதிகமான மக்களிடம் காணப்படுவதுடன் அதன் தொடர் விளைவுகளும் பாரதூரமாகவே இருப்பதுமாகும். இந்நோய் வந்து விட்டால் அதை முற்று முழுதாகக் குணமாக்க முடியாது எனக்கூறப்படுகின்றது. இருப்பினும் வைத்திய ஆலோசனைப்படி நடப்பதில் நோயாளி முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இந்நோயின் தொடர் விளைவுகளைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். நீரிழிவு நோயாளி ஒருவரைப் பொருத்த வரையில் சுயகட்டுப்பாட்டுடன் எந்நேரமும் அவதானத்துடன் செயற்பட்டால் தேகாரோக்கியத்தைப் பேணி, வாழ்நாளை நீடித்துக்கொள்ள முடிகிறது.
நீரிழிவு நோய் குறித்து பலநூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக அறியப்பட்டிருந்தாலும் கூட, இதற்கான உறுதியான சிகிச்சை முறை என்பது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் தான் கண்டறியப்பட்டது. 1922ஆம் ஆண்டில் பேண்டிங்க் அண்ட் பெஸ்ட் என்ற கனேடிய விஞ்ஞானிகள் கூட்டணி இன்சுலின் மூலம் நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்தனர். அதுவரை, ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்தால் மரணம் நிச்சயம் என்கிற நிலைதான் நீடித்தது. இன்சுலினை கண்டுபிடித்த 'பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்" என்ற விஞ்ஞானிகள் கூட்டணியின் தலைவர் பிரெடெங்க் பேண்டிங்கின்" பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் திகதியை, ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினமாக அனுஸ்டிக்கப்படுகிறது. முதன் முதலில் இது 1991 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படத் தொடங்கியது, தற்போது உலக அளவில் 192 நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது.
வயது வித்தியாசம், தகைமை, தராதரம், பால் இன பேதம், செல்வம், வறுமை, நகரம் கிராமம் மட்டுமன்றி தயவு தாட்சண்யம் கூட காட்டாது நீரிழிவு நோய் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகின்றது. உலக நீரிழிவு நோய் தினத்தில் நீரிழிவுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பிரச்சாரங்கள் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன. பல்வேறு சுகாதார அமைப்புகளும் மருத்துவமனைகளும், தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களும், நீரிழிவு நோய் அமைப்புகளுடன் இணைந்து இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன. உலக அளவில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு வானொலி, தொலைக்காட்சி, விளையாட்டுப் போட்டிகள், பிரச்சாரங்கள், விழிப்புணர்வுக் கூட்டங்கள், பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள் ஆகிய தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அது மட்டுமல்லாமல், ஐக்கிய நாடுகள் சபை இந்த நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனியான அடையாளச் சின்னம் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது. நீலநிறத்திலான வளையம் நீரிழிவு நோய் தடுப்பின் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு அடுத்தபடியாக நீரிழிவு நோய்க்கு மட்டுமே ஐக்கிய நாடுகள் சபை இப்படித் தனியான ஒரு சின்னத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் உலக அளவில் நீரிழிவுநோய் என்பது மிகப்பெரும் ஆட்கொல்லியாக உருவெடுத்து வருகிறது என்கிற ஆபத்தை ஐக்கிய நாடுகள் சபை குறிப்புணர்த்துவதாக நீரிழிவு நோய் நிபுணர்கள் கருதுகின்றார்கள். தற்போது உலக அளவில் 18 கோடிக்கு மேற்பட்டோர் நீரிழிவு நோயுள்ளவர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை 2025-ல் 36 கோடியே 50 இலட்சமாக அதிகரிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய ரீதியில் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள 10 நாடுகளை (2009 தகவல் படி) பின்வருமாறு வகைப்படுத்தலாம். 1) இந்தியா 2) சீனா 3) அமெரிக்கா 4) இந்தோனேசியா 5) ஜப்பான் 6) பாகிஸ்தான் 7) ரஷ்யா 8) பிரேஸில் 9) இத்தாலி 10) பங்களாதேஷ் என்பனவாகும். முதலிடத்தில் காணப்படும் இந்தியாவில் தற்போது சுமார் 2 கோடியே 50 இலட்சத்திலிருந்து 3 கோடி பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், 2 கோடிப் பேருக்கு தங்களுக்கு இந்த நோய் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர் என்றும் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இவ்வாறு நோயைப்பற்றி தெரிந்து கொள்ளாதோர் இந்தியாவில் மாத்திரமல்லாமல் மூன்றாம் உலக நாடுகளிலும் அதிகமாகக் காணப்படுகின்றனர்.
நீரிழிவு தொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்க டாக்டர் ஒருவர் 'நீரிழிவு உள்ள ஒருவர் தனக்கு நீரிழிவு உள்ளதென்று தெரிந்து கொண்டால், நீரிழிவு என்பது அவருக்கு ஒரு நோயல்ல." என்று குறிப்பிட்டிருந்தார். இதன் அர்த்தம் நீரிழிவு நோய் உள்ள ஒருவர் தனது கட்டுப்பாட்டின் மூலம் நோயைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம் என்பதாகும். நாம் நோயைக் கட்டுப்பாடாக வைத்திருப்பதற்கு, முதலில் அந்நோயைப்பற்றி முழுமையாக நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது நீரிழிவு நோய் என்ன காரணத்தால் ஏற்படுகிறது. அது மனித உடலை எந்த வகையில் பாதிக்கிறது என்பதைப் பற்றிய விளக்கங்களை நோயாளிகள் மட்டுமல்லாது அனைவரும் அறிந்திருத்தல் வேண்டியது இன்றியமையாதது.
முதலில் நீரிழிவு என்றால் என்ன என்பது பற்றி சிறிய விளக்கம் ஒன்றை எளிமையான முறையில் பெற்றுக் கொள்வோம். எமது இரத்தத்தில் இனிப்புச்சத்து (குளுக்கோசின் அளவு) வழமையாக இருப்பதிலும் பார்க்க அதிகரிப்பதினாலேயே நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இக்குளுக்கோசானது நாம் உண்ணும் உணவிலுள்ள மாப்பொருள் சமிபாடடைந்து குளுக்கோசாக மாற்றப்பட்டு குருதியால் அகத்துறிஞ்சப்படுகிறது. சாதாரண மனிதனின் 100ml குருதியில் 80-120mg குளுக்கோசு காணப்படுகிறது. எமது உடல் இயக்கத்திற்குத் தேவையான குளுக்கோசு எமது உடற் கலங்களுக்குள் உடைக்கப்பட்டுப் பெறப்படுகிறது. குருதியில் உள்ள குளுக்கோசு உடற்கலங்களுக்குள் செல்ல உதவுவது உணவுப்பாதையுடன் தொடர்பாக இருக்கும்.
சதையி (Pancreases) எனும் சுரப்பியால் சுரக்கப்படும். "இன்சுலின்" (Insulin) எனப்படும் ஓர் ஓமோன் ஆகும். இவ் இன்சுலின் உடலில் தொழிற்படாது விடுவதால் அல்லது இன்சுலின் சுரக்கும் அளவு குறைவதால் குருதியிலுள்ள குளுக்கோசு உடற்கலங்களுக்குள் செல்வது தடைப்படும். இதனால் குருதியில் குளுக்கோசின் அளவு கூடுகிறது. சாதாரணமாக சிறுநீரகங்கள் (Kidney) குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுவதில்லை.
குருதியில் குளுக்கோசின் அளவு கூடும் போது அதாவது 100ml குருதியில் குளுக்கோசின் அளவு 180mg ற்கு மேலாகக் கூடும்; போது சிறுநீரகங்கள் மேலதிக குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுகின்றன. இதனை சிறுநீரில் சீனி (Sugar) இருக்கிறது எனக் குறிப்பிடுகிறோம். இவ்வாறு சிறுநீருடன் குளுக்கோசு போகும் போது உடலிலிருந்து அதிகம் நீரும் சேர்ந்தே வெளியேறும். இதனால் வழமையிலும் பார்க்க அதிகளவு சிறுநீர் உண்டாவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனாலேயே இதை நீரிழிவு என்கிறோம். அதிகளவு நீர் வெளியேறுவதால் மிதமிஞ்சிய தாகமும் ஏற்படுகிறது.
சிலரின் உடலில் நீரிழிவு நீண்டகாலங்களாகக் காணப்பட்டாலும் கூட நோயாளியின் அறியாத்தன்மை காரணமாக தனக்கு நீரிழிவு உள்ளது என்பதை நோயாளி உணர்ந்து கொள்வதில்லை. இதனால் பல பாரதூரமான விளைவுகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. எனவே நீரிழிவு நோயின் மூலமான அறிகுறிகள் சிலதை நோக்குவோம்.
1. அடிக்கடி சிறுநீர் கழித்தல், வழமைக்கு மாறாக இரவிலும் பல தடவை சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படல்.
2 அடிக்கடி தாகம் ஏற்படல்.
3. அசாதாரண பசி ஏற்படல்.
4. உடல் சோர்வாக இருத்தல்.
5. உடல் நிறை குறைந்து கொண்டு போதல்.
6. தலை சுற்றுதல்,மயக்கம் போன்றன அடிக்கடி ஏற்படல்.
7. கை, கால்களில் விரைப்புத் தன்மை ஏற்படுதல்.
8. தேகத்தில் பருக்களும், கட்டிகளும் தோன்றல்.
9. ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளில் ,கூடிய அழற்சி ஏற்படல்.
10. கண் பார்வை குறைவடைதல்.
11. புண்கள் ஏற்படின் அவை ஆறுவதற்கு வழமையிலும் கூடிய நாட்கள் எடுத்தல்.
12. எளிதில் கோபமடைதல்.
மேற்குறிப்பிட்ட அறிகுறிகளில் சிலவற்றை சிலகாலமாக நீங்கள் அவதானித்தால் அருகிலுள்ள வைத்திய சாலைக்குச் சென்று சிறுநீர்ப்பரிசோதனை செய்வதன் மூலம் அந்நோய் இருக்கின்றதா?, என்பதை அறிந்து கொள்ளலாம். பின்பு இரத்தப்பரிசோதனை செய்வதன் மூலமே இந்நோயை நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். நீரிழிவு நோய் காணப்படுமிடத்து டாக்டரை அணுகி உரிய சிகிட்சை முறைகளை மேற்கொள்ளல் அவசியமாகும்.
பொதுவாக நீரிழிவு நோயினை நான்காக வகைப்படுத்தலாம். அதாவது, முதல் வகை நீரிழிவு நோய், இரண்டாம் வகை நீரிழிவு நோய், கர்ப்பகால நீரிழிவு நோய், சதையியில் (Pancreases) ஏற்படும் கற்களால் உருவாகும் நீரிழிவு நோய் என்ற அடிப்படையில் நான்கு வகையான நீரிழிவு நோய்களே தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 98 சதவீதமானவர்களை பாதிப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
முதல் வகை நீரிழிவு நோய் என்பது பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் தன்மை கொண்டது. இதனால் சில மருத்துவர்கள் இதை குழந்தைகளின் நீரிழிவு நோய் என்றும் அழைக்கிறார்கள். குழந்தை பிறந்தது முதல் முப்பது வயது வரை தாக்கும் தன்மை கொண்டது எனப்படுகின்றது.
இந்த முதல் பிரிவு நீரிழிவு நோய் ஏன் ஏற்படுகிறது என்பது தொடர்பில் தெளிவான உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் எட்டப்படவில்லை. மனிதர்களின் உடம்பில் இயற்கையிலேயே இருக்கும் நோய் எதிர்ப்புத்தன்மையானது, திடீரென்று சதையியியைத் (Pancreases) தாக்கி அதில் இருக்கும் இன்சுலின் சுரக்கும் சுரப்பிகளை அழித்து விடுகிறது. இதனால் இன்சுலின் சுரக்கும் தன்மையை சதையி இழந்துவிடுகிறது. இப்படி மனித உடம்பின் ஒரு பகுதி கலங்கள் , இன்னொரு பகுதிக் கலங்களை ஏன் தாக்குகிறது என்பதற்கு இதுவரை உறுதியான காரணங்கள் தெரியவில்லை. ஒருவகையான வைரஸ் தாக்குதல் காரணமாகவே இப்படி நடப்பதாக அண்மைக்கால கண்டுபிடிப்புகள் கூறினாலும் அந்த குறிப்பிட்ட வைரஸை இனம் காண்பதற்கான ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
அதனால், இந்த முதல் வகை நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, இது ஒருவருக்கு வந்தால் அவருக்கு ஆயுட்காலம் முழுமைக்கும் இன்சுலின் ஊசிமூலம் குளுக்கோசின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சிறந்த வழியாகக் கூறப்படுகின்றது.
உலகளாவிய ரீதியில் எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பாலானவர்களை பாதிப்பது இரண்டாவது வகை நீரிழிவு நோயாகும். இந்த இரண்டாவது வகை நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, அது ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன.
பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் 80 சதவீதம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அது தவிர கூடுதல் உடல் பருமன், அதிகபட்ச கொழுப்புச்சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது, உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை போன்ற காரணிகள், ஒருவருக்கு நீரிழிவு நோயை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது வகையான கர்ப்பகால நீரிழிவு நோய். சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் தற்காலிகமாக வருவது. கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிப்பதாலும், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி காரணமாகவும், பெண்களுக்கு கூடுதலாக இன்சுலின் தேவைப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இந்த கூடுதல் இன்சுலின் இயற்கையாகவே சுரந்தாலும், சில பெண்களுக்கு இது சுரப்பதில்லை. அதனால் அவர்களின் இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரித்து, அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இவர்களின் கர்ப்பத்தின் இறுதியில் குழந்தை பிறந்ததும் இவர்களில் பலருக்கு நீரிழிவு நோய் இல்லாது போய்விடும்.
நான்காவது வகையான நீரிழிவுநோயை பொறுத்தவரை, சதையியில் ஏற்படும் கற்கள் காரணமாக இது உருவாகிறது. இது உருவாவதற்கு போஷாக்கின்மை உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுப்புற காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், இதற்கான பிரதான காரணி எது என்பது குறித்து இன்னமும் ஆய்வுகள் தொடர்கின்றன.
நீரிழிவினால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். ஒரு நீரிழிவு நோயாளி நோயைக் கட்டுப்பாடாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துவது குறைவடைந்தால் அவர் பாராதூரமான பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார். இது காலப்போக்கில் உடலில் பல்வேறு தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
1. குறைந்த இன்சுலின் தொழிற்பட்டால் ஏற்படும் விளைவுகளால் குருதிக் குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். இதனால் காலப்போக்கில் குருதி ஓட்டம் குறைவடைவதனால் மாரடைப்பு, உயர்இரத்த அழுத்தம் போன்ற இதய நோய்கள் தோன்றலாம்.
2. குறைந்த குருதி விநியோகம் மற்றும் பல காரணங்களால் நரம்புகள் பாதிக்கப்பட்டு உடலின் புலனுணர்வு பாதிக்கப்படும்.
வெள்ளி, 13 நவம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக